ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ரஃபேல் போர் விமானம்குறித்து திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை சீனா செய்தது என்று அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றித் தற்போது பார்க்கலாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா அதிரடித் தாக்குதல்களை நடத்தியது. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் ரஃபேல் போர் விமானங்களின் ஆற்றலைக் கண்டு உலகமே வியந்தது. ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ நிலையங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.
ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களும் ஒரு பெரிய வான்வழி கண்காணிப்பு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் உறுதிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யப் பல்வேறு உலக நாடுகள் பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன.
இதுவரையில் சர்வதேச அளவில் 533 ரஃபேல் போர் விமானங்கள் விற்பனையாகி உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கிய போதே, ஒருங்கிணைந்த பொய் பிரச்சாரத்தைச் சீனா தொடங்கியதாக அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க காங்கிரசுக்கு அளித்த ஆண்டறிக்கையில், சீனாவிடம் வாங்கிய போர் விமானத்தால் ரஃபேல் போர் விமானங்களைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகச் சீனா தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப் பட்டுள்ளது.
தனது J-35 போர் விமானங்களின் விற்பனையை அதிகரிக்கவும் பிரான்ஸின் ரஃபேல் விமானங்களின் விற்பனையைத் தடுக்கவும் செயற்கை நுண்ணறிவு மூலமும் மற்றும் வீடியோ கேம் மூலமும் போலி படங்களைப் பரப்ப, போலி சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாக அமெரிக்க ஆணையம் சீனாவைக் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கெனவே, ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதை நிறுத்துமாறு இந்தோனேசியாவை சீன தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த மே மாதம் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போரில், சீன ராணுவ தளவாடங்களையே பாகிஸ்தான் பயன்படுத்தியது. 2019 முதல் 2023 வரை பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியில் சுமார் 82 சதவீதம் சீனாவின் பங்காகும். தனது ஆயுதங்களின் நுட்பத்தைச் சோதித்துப் பார்க்கவும் விளம்பரப்படுத்தவும் இதை ஒரு வாய்ப்பாகச் சீனா பயன்படுத்தியதாக அமெரிக்க ஆணையம் குறிப்பிட்டுள்ளது. HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 வான் ஏவுகணைகள் மற்றும் J-10 போர் விமானங்கள் போன்ற சீன உபகரணங்கள் முதல் முறையாக இந்தப்போரில் தான் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 40 ஐந்தாம் தலைமுறை J-35 போர் விமானங்கள், KJ-500 போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைப் பாகிஸ்தானுக்கு விற்க சீனா முன்வந்துள்ளது. அதே மாதத்தில், பாகிஸ்தான் தனது 2025–26 பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் அதிகரித்து 9 பில்லியன் டாலராக உயர்த்தியது. மேலும் இந்த ஆய்வறிக்கையில் சீனா இந்தியா உறவைப் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்ட, பேச்சுவார்த்தைகள்மூலம் தீர்வுகளைக் காண சீனா முயற்சி செய்கிறது என்றும் , தனது நலன்களை விட்டுக் கொடுக்காமல், எல்லைப் பிரச்னையைப் பிரிப்பதன் மூலம் வர்த்தகம் மற்றும் பிற பகுதிகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான கதவையும் சீனா திறந்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க ஆணைய அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் உலகளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்று கூறியுள்ள அறிக்கை, பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாங்காய் உச்சி மாநாட்டுக்காகச் சீனா சென்றதையும், அங்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரையும் சந்தித்து பேசியதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
50 சதவீத வரி விதிப்புக்குப் பிறகு அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்ததைத் தொடர்ந்து இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா ரபேல் விமானங்கள் எதையும் இழக்கவில்லை என்றும், 3 விமானங்களை இழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய பாதுகாப்பு சந்தையில் ரஃபேலுக்குபதிலாகத் தனது ஜே-35 ரக விமானங்களை விற்பனை செய்வதற்காகவே சீனாஇந்தப் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















