சீனாவை சமாளிக்க உலகின் மிக உயரமான விமானப்படை தளத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள நியோமா விமானப்படை தளத்தின் சிறப்பம்சங்கள் என்ன ? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
2020-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு விரிசல் கண்ட இந்தியா – சீனா உறவு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் மலர்ந்தது. இதன்படியே, இருநாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.
ஆனால், ராணுவ விவகாரத்தில் காலை வாரியே பழக்கப்பட்ட சீனா மீது இந்தியா எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். அதன் காரணமாகவே, கிழக்கு லடாக்கில் உலகின் மிக உயரமான நியோமா விமானப்படை தளத்தை இந்தியா செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை சீனா கட்டி வருகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து, 110 கி.மீ., தொலைவில் இந்த விமான தளம் கட்டப்பட்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமானது. வீரர்கள் முகாம், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள், ஏவுகணை தளங்கள், ரேடார் அமைப்புகள் என ராணுவத்துக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன் இந்த விமான தளத்தைச் சீனா உருவாக்கி வருகிறது.
மேலும், திபெத்தின் கர் பவுண்டி பகுதியிலும் மற்றொரு ஏவுகணை தளத்தை சீனா அமைத்து வருவது இந்திய ராணுவத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இது தவிர, இந்தியாவை நோக்கி இருக்கும் ஹோடான், காஷ்கர், கர்குன்சா, ஷிகாட்சே, பாங்டா, யிங்சி ஆகிய விமானப்படை தளங்களிலும் போர் விமானங்களை சீனா குவித்து வைத்துள்ளது. அங்கு இருந்தபடி உளவு பார்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், ட்ரோன் இயங்குதளங்களையும் சீனா அமைத்துள்ளதாகத் தகவல் தெரிய வந்திருக்கிறது.
இதனைத்தொடர்ந்து சீனாவுக்கு அருகே சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நியோமோ விமானப்படை தளத்தை இந்தியா உயிர்பித்துள்ளது. 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட இந்த விமானப்படை தளத்தை விமானப்படை தளபதி ஏ.பி.சிங் முறைப்படி திறந்து வைத்தார்.
போர் சூழல் ஏற்பட்டால், ராணுவ விமானங்கள் எளிதாகத் தரையிறங்க வசதியாக 2.7 கி.மீ., நீளத்திற்கு வலுவான ஓடுபாதை அமைக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதுதவிர, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உட்படஅனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நியோமா படைத்தளத்தில் இடம்பெற்றிருப்பது இந்திய ராணுவத்துக்கு கூடுதல் பலம்.
படைகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை விரைவாகக் குவிக்கும் வகையில் நியோமா விமானப்படை தளம் மேம்படுத்தப்பட்டுள்ளதால், கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் சோ, டெம்சோக் மற்றும் டெஸ்பாங் பகுதிகளுக்கு, இங்கு இருந்தபடி படைகளை எளிதாக நகர்த்திச் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.
லே, கார்கில் மற்றும் டவுலத் பெக் ஓல்டி ஆகிய படைத்தளங்கள் வரிசையில், நியோமா விமானப்படை தளமும் இந்தியாவின் பலத்தை கூட்டியிருப்பதால், சீனாவிற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும் எனப் பெருமிதம் தெரிவிக்கிறார்கள் ராணுவ அதிகாரிகள்.
















