உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து ஒரு புதிய போா் நிறுத்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இந்த அமைதித் திட்டத்தில் என்ன என்ன விதிமுறைகள் உள்ளன? இது முழுமையான போர் நிறுத்தத்துக்கும், அமைதிக்கும் வழி வகுக்குமா? என்பது பற்றிப் பார்க்கலாம்.
இரண்டாவது முறை அதிபராக பதவியேற்றதில் இருந்து 8 போரை நிறுத்திவிட்டேன் என்று எங்குப் பேசினாலும் சுயதம்பட்டம் அடித்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒன்பதாவதாக ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த முயற்சி எடுத்துவந்தார். அலாஸ்காவில் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்து பேசியதும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸகியை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசியதும், சவூதியில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததும் எனத் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட அதிபர் ட்ரம்ப், இப்போது புதிய 28 அம்ச அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்யாவின் சிறப்புத் தூதா் கிரில் டிமித்ரியேவ் இணைந்து, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான 28 அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்த 28 அம்ச திட்டத்தை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நீடித்த அமைதிக்கு இரு தரப்பினரும் கடினமான, ஆனால் அத்தியாவசியமான விஷயங்களில் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டான்பாஸ் பகுதிகளை ரஷ்யாவுக்கு உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும். கிரிமியா மற்றும் ரஷ்யா கைப்பற்றிய பிற பகுதிகளை ரஷ்யாவின் பகுதிகளாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும். தனது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 8 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உக்ரைன் குறைக்க வேண்டும். அனைத்து நீண்ட தூர ஏவுகணைகளையும் உக்ரைன் கைவிட வேண்டும்.
நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராகாமல், நடுநிலை நாடாகவும் அணு ஆயுதம் இல்லாத நாடாகவும் இருக்க உக்ரைன் ஒப்புக்கொள்ள வேண்டும். உக்ரைனின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக ரஷ்ய மொழியை அறிவிக்க வேண்டும். ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் கிளையை உக்ரைன் அரசு அங்கீகரிக்க வேண்டும். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 100 நாட்களுக்குள் உக்ரைன் தேர்தலை நடத்த வேண்டும் என்பன போன்ற உக்ரைனுக்கான இந்த நிபந்தனைகளை எல்லாம், இஸ்தான்புல் பேச்சுவார்த்தையின்போது ரஷ்யா முன்வைத்ததாகும்.
போர் எப்படி முடிவுக்கு வர வேண்டும் என்று ரஷ்யா கூறியதோ அதையே இந்த 28 அம்ச திட்டம் எதிரொலிக்கிறது. இதற்குப் பதிலாக ரஷ்யா என்னென்ன உறுதிமொழிகளை வழங்கும் என்பது பற்றி இந்தத் திட்டத்தில்ல் தெளிவாக இல்லை என்றாலும், ரஷ்யா மீதான உலகப் பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்றும், G7 கூட்டமைப்பில் ரஷ்யா சேர்க்கப்பட்டு அந்த அமைப்பு G8 என்று அழைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த 28 அம்ச திட்ட ஒப்பந்தத்தில் செயல்பாடுகளை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமைதி கவுன்சிலால் கண்காணிக்கப்படும் என்றும், ஒப்பந்த மீறல்களுக்கு உடனடியாகத் தடைகள்ள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசுவதற்காக, அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கால் தலைமையிலான மூத்த ராணுவ அதிகாரிகள் குழு உக்ரைன் சென்றுள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உக்ரைனுக்கு வந்துள்ள அமெரிக்காவின் மிக உயரிய ராணுவக் குழு இது என்பது குறிப்பிடத் தக்கதாகும். மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புத் தலைவர் ருஸ்தம் உமெரோவைச் சந்தித்த ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், உக்ரைன் நீண்டகாலமாக நிராகரித்து வந்த விதிகள் உள்ளிட்ட பல அம்சங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 28 அம்ச திட்டம், ரஷ்யாவுக்கு சாதகமாகத் தயாரிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உக்ரைன் எந்தவொரு இராஜதந்திர முயற்சிகளையும் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளாது என்று இந்த திட்டம் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். 100 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஜெலன்ஸ்கி, ரஷ்யா- அமெரிக்கா தயாரித்துள்ள 28அம்ச அமைதித் திட்டத்தை ஒப்புக்கொள்வார் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















