செயற்கை நுண்ணறிவு மற்றும் Humanoid ரோபோக்கள் உலக வறுமையை போக்கி, ஒவ்வொருவரையும் செல்வந்தராக்கும் என உலக பணக்காரரான எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-சவுதி முதலீட்டாளர் மன்றத்தில் பேசிய எலான் மஸ்க், தொழில்நுட்பம் காரணமாகப் பலருக்கு வேலை பறிபோகும் என்ற அச்சம் நிலவினாலும், AI மற்றும் ரோபோக்களின் முன்னேற்றங்கள் உலகளாவிய செழுமைக்கு வழிவகுக்கும் என்று ஆணித்தரமாகக் கூறினார்.
உலகத்தை வறுமையற்றதாக மாற்றப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதற்குத் தொழில்நுட்பம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என வலியுறுத்திய எலான் மஸ்க், AI மற்றும் Humanoid ரோபோக்கள் உண்மையில் வறுமையை ஒழிக்கும் என்று கூறினார்.
எதிர்காலத்தில் மக்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஒரு கட்டத்தில் பணத்தின் பயன்பாடு தேவையற்றதாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும், AI-யின் வளர்ச்சியால், மனிதர்கள் தங்கள் கவனத்தை விவசாயம் மற்றும் பிற அத்தியாவசியமற்ற பணிகளில் செலுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்தார்.
















