துபாயில் சாகச நிகழ்ச்சியின்போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான துயர சம்பவத்தை விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.
துபாயில் வானில் வட்டமடித்து சாகசத்தில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானம் தரையில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமான கண்காட்சி தொடங்கி நடைபெற்று வந்தது.
விமான கண்காட்சியின் கடைசி நாளில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தக் கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர்.
இந்நிலையில், தேஜஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணி அளவில் நேர்ந்த இந்த விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய விமானப்படை, உயிரிழந்த விமானியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இந்திய விமானப் படையின் தேஜஸ் ரக போர் விமானம் கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற பயிற்சியின் போது முதன் முறையாக விபத்துக்குள்ளானது.
தற்போது துபாயிலும் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி மனதை உலுக்குகிறது.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் நடைபெறும் விமான கண்காட்சிகளில் பாதுகாப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
அதேநேரத்தில், இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் தேஜஸ் விமானத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை பாதிக்காது என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















