பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பு கவசமா திமுக என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மத்திய மாவட்டத் திமுக ஒன்றியச் செயலாளரான திருவக்கரை பாஸ்கரன் என்பவர் கடந்த ஆறு மாதங்களாகத் தன்னை மிரட்டி, பலவந்தமாகத் பாலியல் தொல்லை அளித்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ள காணொளி காண்போரைப் பதற வைப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகப் பெண்களை வேட்டையாடுவதையே வழக்கமாய் வைத்துள்ள அறிவாலய
உடன்பிறப்புகளின் கோரமுகத்தையே இச்சம்பவம் மீண்டுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற கதையாக, திமுககாரன் என்பதே குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது. ரவுடியிசம், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல், கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயல்பாடுகளிலும் கொடிகட்டிப் பறக்கும் திமுக உடன்பிறப்புகள், ஆட்சி கையிலிருக்கும் மமதையில் தமிழகப் பெண்களையும் தேடித்தேடி சீரழிப்பதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலங்காலமாக பெண்களை மட்டம் தட்டுவதையும், இரட்டை அர்த்த வசனங்களையும் ரசிக்கும் ஒரு கூட்டத்திடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தால் என்னவாகும் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள் என்றும், செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்காக சட்டமன்றத் தேர்தலை நோக்கி தவம் கிடக்கிறார்கள். கயவர்களின் கூடாரமான திமுக அரசு அதன் ஆணவத்தாலேயே வீழப்போவது உறுதி என்றும் நயினார் கூறியுள்ளார்.
















