தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஜீவா நகர், மீனவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கடும் சிரமத்திற்குள்ளான மக்கள், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ஆத்தூர்- குரும்பூர் செல்லும் சாலையில் வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள தரைப்பாலத்தினை ஒட்டியுள்ள தார்ச்சாலை மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டது. தரைப்பாலத்தினை அமலைச்செடிகள் அடைத்திருந்ததால் மழைவெள்ள நீர் செல்ல வழியின்றி தார்ச்சாலையை பெயர்த்துக்கொண்டு பாய்ந்தோடியது. இதனால் ஆத்தூரிலிருந்து குரும்பூர் செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
















