ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என புகழ்பெற்றதுதான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்புக்கு பின் கோயம்பேட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த கோயம்பேடு பேருந்து நிலையம்தான் தனியாரிடம் ஒப்படைத்த மின்சார பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனையாக பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்….
போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 12 வருட ஒப்பந்தத்தில் மின்சார பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அதனை இயக்கும் ஓட்டுநர்களையும் தனியார் நிறுவனமே அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மின்சார பேருந்துகளை பராமரிப்பதற்கு மட்டும் அரசு பேருந்துகளை பழுது பார்க்கும் பணிமனைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக வியாசர்பாடி பணிமனையை மாதாவரத்திற்கும் அடுத்து பெரும்பாக்கம் பணிமனையை செம்மஞ்சேரிக்கும் மாற்றியது மாநகர போக்குவரத்து கழகம். தற்போது பூந்தமல்லி பணிமனையை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 6 மற்றும் 7வது நடைமேடைகளுக்கு மாற்றி உள்ளனர்.
கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் காலியாக பூந்தமல்லி வரை சென்று வழித்தடங்களில் இயங்குவதோடு, பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிபுரியும் பணிமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்காக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறையே நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் போது அதை தனியாரிடம் ஒப்படைப்பதால் செலவினங்கள் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பணிமனைகளை மாற்றுவதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் காலியாக ஓடும் பேருந்துகளால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழக போக்குவரத்து துறையில் நடக்கும் இந்த மாற்றத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அரசு போக்குவரத்து தொழிலாளர்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
















