ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியபின் உருவாகும் இரண்டாவது புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த “சென்யார் ” என்று பெயரிடப்படும் என கூறப்படுகிறது..மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை – தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
















