இஸ்ரேலை போலவே, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சில தாக்குதல்கள் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
“பாலஸ்தீனத்தை யூதர்கள் பிரித்துத் துண்டுதுண்டாக்கிவிட்டார்கள். இப்போது அவர்கள் வசிக்கும் இஸ்ரேல்கூட, பாலஸ்தீனத்திற்கு சொந்தமானதுதான். எனவே, இஸ்ரேல், காசா, மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் ஒன்றிணைத்து முழுமையான பாலஸ்தீனத்தை உருவாக்குவதுதான் எங்களின் இலக்கு” – இந்த முழக்கத்தோடு செயல்பட்டு வரும் இயக்கம்தான் ஹமாஸ்.
தனது இந்த நோக்கத்திற்காக 2023ம் ஆண்டு அந்த அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அந்தப் போர் அண்மையில்தான் முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில்தான், அந்த அமைப்பு மேலும் பல இடங்களில், மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எங்கெல்லாம் யூதர்கள் அதிகம் உள்ளார்களோ, அங்கெல்லாம் ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், இதற்காக தனி பிரிவே செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் மீதான இந்த குற்றச்சாட்டை, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்தான் தற்போது முன்வைத்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் யூதர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
எனவே, இந்த ஐரோப்பிய நாடுகளை எல்லாம் ஹமாஸ் குறிவைத்திருந்ததாக மொசாட் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேடுதல் வேட்டை ஒன்று நடைபெற்றது. அப்போது, அதிகளவில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இது குறித்த விசாரணையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான பஸ்ஸம் நைமின் மகன் முகமது நைமுக்கு இதில் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்தக்கட்ட விசாரணை சூடுபிடித்தது. அப்போதுதான், ஆஸ்திரியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் குழுவினர் ஊடுருவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஐரோப்பிய பாதுகாப்புப் படைகள் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அதன் விளைவாக பயங்கர ஆயுதங்களையும், ஹமாஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்களையும் அவர்கள் கைது செய்தனர்.
இந்த தகவல்களை எல்லாம் மொசாட் அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, ஐரோப்பா முழுவதும் ஹமாஸ் அமைப்பு மீதான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் ஆதரவாளர்களை விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, ஜெர்மனி தனது நாட்டில் உள்ள ஹமாஸ் ஆதரவு தொண்டு நிறுவனங்களிலும், மத அமைப்புகளிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் சில இடங்களில் ஹமாஸ் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முயற்சிகள் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மொசாட், இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கியபோதே இந்த ஐரோப்பிய நாடுகள் மீதான தாக்குதல்களும் திட்டமிடப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. ஆனால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் முன்வைத்துள்ள இந்த எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஹமாஸ் அமைப்பு இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















