உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வுபெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முதன்முறையாக பொறுப்பேற்கிறார் என்ற பெருமையை சூர்யகாந்த் பெற்றுள்ளார்.
1962ல் ஹரியானா மாநிலம், பெட்வார் கிராமத்தில் பிறந்த சூர்யகாந்த், 1984ல் சட்டப்படிப்பை முடித்தார். பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த சூர்யகாந்த், 2000ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் முதல் இளம் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி சூர்யகாந்த், 2019 மே 24ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
சுமார் 6 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சூரியகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியை தொடங்கியுள்ள சூர்யகாந்த், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















