வேலூரில் பள்ளிக்கூட மாணவர்களை கிறிஸ்தவ சினிமா படத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களை கேரளாவில் வெளியான திரைப்படத்தை காண பள்ளி நிர்வாகம் அழைத்துச் சென்றதாகவும், திரையரங்க வாசல் முன்பு நின்று பாதிரியார் ஒருவர் வரவேற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கும் பள்ளியிலிருந்து கிறிஸ்தவ மதத்தினை பரப்பும் திரைப்படத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்வது என்பது எந்த மதசார்பின்மை கணக்கில் சேரும் என வினவியுள்ள அவர், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு பள்ளி ஒன்றில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு உரையாற்றியபோது மதசார்பின்மைக்கு ஆபத்து என்று திமுக அரசுக் குரல் கொடுத்ததாகக் கூறியுள்ள அவர், கிறிஸ்தவ மதத்தை தூக்கி பிடிக்கும் படத்திற்கு அழைத்துச் சென்றதை கல்வி அமைச்சர் கண்டிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும், பிஞ்சு குழந்தைகளின் மனதில் மதமாற்றம் எனும் நஞ்சை விதைக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்துக்கள் தம் குழந்தைகளை மதமாற்ற சக்திகளின் தந்திரத்தில் இருந்து பாதுகாத்துகொள்ள வேண்டும் எனக் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
















