கனடாவில் C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்ககலாம் இந்த செய்தித்தொகுப்பில்…
கனடா அரசு தனது குடியுரிமைச் சட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை அறிவித்துள்ளது. C-3 சட்டத் திருத்தத்தின் மூலம், வம்சாவளி அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை விதிகளை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனடாவில் வாழும் மக்கள்தொகையில் இந்தியர்கள் பெரும் பங்கு வகிப்பதால், இந்தச் சீர்திருத்தம் இந்தியர்களுக்கு நேரடி பயன் அளிக்கும் எனத் தெரிவிக்கிறார்கள். C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கனடா அமைச்சர் லேனா தியாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முந்தைய சட்டத்தால் குடியுரிமை இழந்தவர்கள் தற்போது கனடா வரலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போதைய சட்டத்தின்படி, வெளிநாட்டில் பிறந்த கனடா பெற்றோர்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெற அனுமதி இல்லை. 2009ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முதல் தலைமுறை வரம்பு பல வெளிநாட்டு குடும்பங்களை பாதித்தது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 19 -ம் தேதி ஒன்டாரியோ உயர்நீதிமன்றம் இந்தக் கட்டுப்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பாத, கனடா அரசு பல்வேறு சீர்திருத்தங்களுடன் C-3 மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பிறக்கப்போகும் குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல பெண்கள் பிரசவத்திற்காக மட்டும் கனடா செல்ல வேண்டிய நிலை இதுவரை நீடித்தது.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம், அதற்கு விலக்களித்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது தத்தெடுப்பதற்கு முன்போ, 1,095 நாட்கள் பெற்றோர் கனடாவில் வசித்திருந்தால் போதுமானது என விதிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
இது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நடைமுறையுடனும் ஒத்துப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமல்படுத்தும் தேதியை அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தவுடன் குடியுரிமை விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரிக்கும் என்று சட்ட நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
















