கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு தான் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
வீணாகக் கடலில் சென்று கலக்கும் வைகை அணையின் உபரிநீரானது, மதுரை உசிலம்பட்டி, தேனி ஆண்டிப்பட்டி மற்றும் திண்டுக்கல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் தேவையையும், சுமார் 2000-த்திற்கும் அதிகமான விளைநிலங்களின் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்யட்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் 58 கிராமக் கால்வாய் திட்டம். 58 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயப் பெருமக்களின் தொடர் போராட்டங்களின் விளைவால் இக்கால்வாய் உருப் பெற்றிருந்தாலும் திமுக அரசின் அலட்சியத்தால் இன்னும் உயிர் பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைகை அணை நிரம்பி தளும்பிய போதும், தேனி மாவட்டத்தை மழை வெள்ளம் சூழ்ந்த போதும் 58 கிராம கால்வாயில் அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால் 114-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்தன. பாதிக்கப்பட்ட மக்களுடன் பாஜக நிர்வாகிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு கால்வாயை முறையாக சுத்தம் செய்யாமல் அவசரம் அவசரமாக திமுக அரசு தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதால், பயனடையும் கிராமங்களுக்குத் தண்ணீர் சென்றடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நீர்நிலைகளைத் தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே தங்கு தடையற்ற நீரோட்டம் சாத்தியமாகும் என்ற அடிப்படை கூட அறியாமல் தங்களை வறட்சியின் பிடியில் சிக்க வைத்துள்ள திமுக அரசின் மீது தேனி மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பதை எனது நேற்றைய பிரச்சாரப் பயணத்தில் என்னால் உணர முடிந்தது.
58 கிராமக கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு தான் என்பது இன்று வெளிப்படையாகவே நமக்குத் தெரிகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















