சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு எஸ்ஐஆர் படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்பவரை கடந்த 2021ல் பெங்களூருவுக்கு விமானத்தில் சென்றபோது தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மும்பையில் இறந்துபோன ஒருவரது வங்கி கணக்கில் இருந்து விடுதலை புலிகள் அமைப்புக்கு 42 கோடியே 28 லட்சம் ரூபாயை மாற்ற முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, மேரி பிரான்சிஷ்காவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோத பணிபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக மேரி பிரான்சிஸ்கா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரிடம் ஓட்டுரிமை இருப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவின் பெயரை சேர்ப்பதற்கான எஸ்ஐஆர் படிவம் அச்சடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம் உள்ள ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
















