அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாவது முறையாக அதிபரான ட்ரம்ப், சர்வதேச நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வர்த்தக பற்றாக்குறை என்று கூறி கடந்த ஜூலை மாதம், இந்தியாவுக்கு 25 சதவீத வரியும், அதன்பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் கூடுதலாக 25 சதவீதம் வரியும் விதித்தார்.
வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அமெரிக்க அரசு வரி விதித்ததை இந்தியா கடுமையாகக் கண்டித்தது. தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
அமெரிக்க தரப்பு தங்களுடைய வேளாண்மை மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் எனக் கூறியதும், அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தடைபடுவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கியதால் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா ஆண்டுக்குச் சுமார் 2.5 பில்லியன் டாலர் சேமித்ததாக CLSA அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் உள்நாட்டு தேவைக்காகச் சுமார் 88 சதவீத எண்ணெய் இறக்குமதி ஒரு நாட்டுக்கு இது மிகவும் குறைவானது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லூக்கோயில் (Lukoil) மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததைத் தொடர்ந்து, சென்ற மாதத்தை விட 50 சதவீதம் குறைவாக, ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 9.48 லட்சம் பீப்பாய் எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.
மறுபுறம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் இந்தியா அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 5.4 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி ஆகியுள்ளது. மேலும், அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி. இறக்குமதி செய்ய முதல்முறையாக இந்தியா நீண்டகால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி. இறக்குமதி செய்ய நாட்டின் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளன. நாட்டின் மொத்த எல்.பி.ஜி., இறக்குமதியில் இது 10 சதவீதமாகும். இந்த மாற்றங்கள் எல்லாம் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் இந்தியா, அவசரப் படவில்லை என்பதை அமெரிக்காவுக்கு இந்தியா புரிய வைத்துள்ளது.
















