அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனத் தரப்பு எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்டகாலமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே லடாக் பகுதியில் எல்லையோரமாகச் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனாவின் “தெற்கு திபெத்” என்று கூறிவருகிறது. இந்த நிலையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை, ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் 18 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்துச் சீன அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் 21 ஆம் தேதி, லண்டனில் இருந்து ஜப்பானுக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் சீனாவில் ட்ரான்சிட் எனப்படும் காத்திருக்கும் நேரத்தில் இந்தியா பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி துன்புறுத்தியதாகப் பெமா வாங் தாங் குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு சோதனையின் ‘இந்தியா, இந்தியா என்று கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தனியாக அழைத்துச் சென்றதாகவும் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஷாங்காய் வழியாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ததாகவும், இம்முறை கிளம்பும் முன் இந்திய குடிமக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று லண்டனில் உள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின் போது, சீன குடியேற்ற அதிகாரிகளும் China Eastern Airlines ஊழியர்களும் தன்னை கேலி செய்ததாகவும், “சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தெளிவான தகவல், சரியான உணவு அல்லது விமான நிலைய வசதிகளைப் பயன்படுத்தும் உரிமைகளும் தனக்கு மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்ட தம்மை இந்திய தூதரக அதிகாரிகள், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு பத்திரமாக வழியனுப்பி வைத்ததாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆன்லைனில் தம்மை ட்ரோல் செய்வதைக் கண்டித்துள்ள பெமா வாங் தாங், மத்திய அரசால் எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்றும், அனைத்து இந்தியர்களின் கண்ணியத்துக்காகவே என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எக்ஸ் தளத்தில் இல்லை என்றாலும், தனக்கு ஆதரவாகப் பேசிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள்ளார். இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியரை விமான நிலையத்தில் தடுத்து வைத்த விவகாரம்குறித்து சீன அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச விமானப் பயணத்தை நிர்வகிக்கும் பல மரபுகளை மீறும் வகையில் நடந்து கொண்ட சீன அதிகாரிகளால் தங்கள் செயல்களை இன்னும் விளக்க முடியவில்லை என்று கூறியுள்ள ஜெய்ஸ்வால், சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் 24 மணிநேரம் வரை விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் சீனாவின் சொந்த விதிமுறைகளையும் மீறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















