ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராம பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரியை செயல்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தினருக்கு திமுகவினர் அழுத்தம் கொடுப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.
ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பகுதியில் பாய்ந்தோடும் பாலாற்றில் மணல்குவாரி அமைக்கக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணல் கோரி அமைப்பதற்கு அனுமதி கேட்டு, திமுக அமைச்சர்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே மணல் குவாரி அமைக்கும் வகையில் பாலாற்றில் வாகனங்கள் சென்று வரக்கூடிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணலை குவித்து வைத்து ஏற்றுமதி செய்யும் ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்பட்டுள்ளதால், பாலாற்று படுகை களிமண்ணாக மாறி வரும் நிலையில், மேலும் மேலும் குவாரி அமைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மக்களின் நலன், நிலத்தடி நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் அரசு மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசு தங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளா விட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெய்து வரும் மழை காரணமாகப் பாலாற்றில் மணல் சேர்ந்திருக்கும் நிலையில், மணல் குவாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றால், சுற்றுசூழல் நிலை என்ன ஆகும் என்பதே அனைவரின் ஐயமாக உள்ளது.
















