கிழக்கு இலங்கையில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்ததால் மட்டக்களப்பு நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையின் கிழக்கு மாகாணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மட்டக்களப்பு – மண்டூர் மற்றும் பாலையடிவட்டை – வெல்லாவெளி வீதி சாலைகளில் 2 அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நவகிரிகுளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் மழை நீடிக்கும் அபாயம் உள்ளதால் ஆற்றங்கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
















