அமெரிக்காவை மையமாகக் கொண்ட சில எக்ஸ் கணக்குகள், இந்தியர்களைக் குறிவைத்து பல்வேறு இனவெறி மற்றும் எதிர் குடியேற்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாகப் புனேவைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ராஜேந்திர பஞ்சாலின் பழைய புகைப்படங்களைப் பயன்படுத்தியுள்ள அந்தக் கணக்குகள் அவரின் உடல்நலம் குன்றிய நிலையைக் கேலிக்குள்ளாக்கியுள்ளது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்தப் பதிவுகளில் உள்ள புகைப்படங்களில் இருப்பவர்தான் 40 வயதான ராஜேந்திர பஞ்சால். இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் கூலி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். சிறுவயது முதலே ராஜேந்திர பஞ்சால் தீவிரமான தாடை இயக்கக் குறைபாடுகளுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வயதாக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது தாடை எலும்பு முறிந்து, அவரது தாடை மூட்டானது படிப்படியாக உறைந்து தலையோடு இணையும்படியான நிலையை அடைந்தது.
இந்த நிலை மருத்துவத் துறையில் “Temporo mandibular joint angelosis” என அறியப்படுகிறது. குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக முறையான சிகிச்சை கிடைக்காததால், ராஜேந்திர பஞ்சால் சுமார் 40 ஆண்டுகள் வரை தனது வாயை முழுமையாகத் திறக்க முடியாத நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் அவர் கஞ்சி போன்ற திரவ வடிவிலான உணவுகளை மட்டுமே உட்கொண்டு வாழும் நிலை இருந்தது. இதனால் பல ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு உடல் உபாதைகளால் அவர் அவதிப்படவேண்டியிருந்தது. பேசக்கூட மிகவும் கஷ்டப்பட்ட அவருக்கு இந்த வேதனைகள், வாழ்க்கையின் 4 தசாப்தங்களை நரகமாக்கியது.
இவரது இந்த வலிகளுக்கும், வேதனைகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. புனேவின் பிரபல தாடை மற்றும் முக சிகிச்சை நிபுணரான சமீர் கார்தே தலைமையிலான மருத்துவக் குழு, ராஜேந்திர பஞ்சாலின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தது. அதன்படி அவருக்குரிய அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொண்ட அந்த மருத்துவக் குழு, பல ஆண்டுகளுக்குப் பின் திட உணவுகளை உண்ணும் வாய்ப்பை ராஜேந்திர பஞ்சாலுக்கு உருவாக்கிக் கொடுத்தது. இந்த முயற்சியில் புனேவில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்களும், தங்களுடன் இணைந்து பணியாற்றியிருந்ததாக மருத்துவர் சமீர் கார்தே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இத்தனை தனிப்பட்ட மற்றும் மருத்துவ வரலாறு கொண்ட ராஜேந்திர பஞ்சாலின் புகைப்படங்கள் தான், அண்மை காலமாகச் சில எக்ஸ் கணக்குகள் மூலம் பல்வேறு நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவை மையமாகக்கொண்ட இந்த எக்ஸ் கணக்குகள் இந்தியர்களை குறிவைத்து, பல இனவெறி மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான பதிவுகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன் எடுத்த ராஜேந்திர பஞ்சாலின் புகைப்படத்தை பயன்படுத்தி, அந்த கணக்குகள் மூலம் இந்தியர்களை குறைசொல்லும் பல கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாகக் குடியேற்றம், எச்-1 பி விசா போன்ற பழைய சர்ச்சைகளை மையப்படுத்தி, பஞ்சாலின் ஊனமுற்ற நிலையை கேலிசெய்யும் கருத்துக்கள் அடங்கிய பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. சில அமெரிக்க தொழில்நுட்ப மையங்களின் வரைபடங்களுடன் கூடிய சில பதிவுகளிலும் ராஜேந்திர பஞ்சாலின் புகைப்படம் இணைக்கப்பட்டு, இந்தியர்கள், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துக்கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 11 மில்லியன் பார்வைகளை பெற்றதாகக் கூறப்படும் ஒரு பதிவில், ராஜேந்திர பஞ்சாலின் புகைப்படத்திற்கு அருகே அமெரிக்க டெக் மையங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பிட்ட சில VERIFIED கணக்குகள் கூட அந்த புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களை இகழும்படியான கருத்துக்களை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சர்ச்சைக்குரிய செயலை ஒரு சுயாதீன உண்மையை கண்டறியும் தணிக்கை குழு முதன்முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அந்த குழு ராஜேந்திர பஞ்சாலின் முழு மருத்துவ வரலாற்றுடன், அவர் சந்தித்த சிரமங்களை அடிக்கோடிட்டு விவரித்து பதிவிட்டதன் மூலம், அந்த புகைப்படத்திற்கும் குடியேற்ற விவகாரத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையே, சமீப காலமாக எக்ஸ் தளத்தில் இந்தியர்களை குறிவைத்து அவதூறு பதிவுகள் அதிகளவு பரவி வருவதாக, சில தனியார் அமைப்புகளின் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக “Center for the Study of Organized Hate” என்ற அமைப்பு சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு மதிப்பீட்டில், அதிபர் டொனால்டு டிரம்பின் 2-வது பதவியேற்புக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியர்களை குறிக்கும் வெறுப்பு பதிவுகள் எக்ஸ் தளத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் இந்தியர்களின் சுகாதாரம், உருவத்தோற்றம், கலாச்சார பழக்க வழக்கங்கள் குறித்த சொல்லாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வைரலாகி வரும் பஞ்சாலின் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளிலும் அந்த வகையான இழிவான ஒப்பீடுகளே வெளிப்பட்டுள்ளன.
2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் ராஜேந்திர பஞ்சால் ஒரு இயல்பான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், அனுமதியின்றி அவரது பழைய புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த அவதூறு பதிவுகள் தற்போது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
















