மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் “மாருதி” என்ற பெயர் அபசகுனம் என நம்பப்படுவதால், அந்தப் பெயர்கொண்ட மாருதி கார்கள் கூடக் கிராமத்துக்குள் நுழையக் கூடாது என்ற பழமையான நம்பிக்கை ஊர்மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் நந்தூர் நிம்பா தைத்யா என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்து மக்களின் பழமையான நம்பிக்கை இவர்களிடையே ஒரு அபூர்வமான மரபை உருவாக்கியுள்ளது. அது என்னவென்றால் இந்தக் கிராமத்திற்குள் மாருதி கார்கள் உள்ளே நுழையக் கிராம மக்கள் வாழ்நாள் தடை விதித்துள்ளனர்.
மாருதி என்ற பெயரை இவர்கள் அபசகுணமாகக் கருதுவதால், பல தலைமுறைகளாக இந்த வித்தியாசமான நடைமுறையை இம்மக்கள் கடைபிடித்தும் வருகின்றனர். அதேபோல, இந்த நந்தூர் நிம்பா தைத்வா கிராமத்தில் இந்து கடவுளான ஹனுமானுக்கு கோயில்களோ, சிலையோ கூட அமைக்கப்படவில்லை.
இவ்வளவு ஏன் ஹனுமான் அல்லது மாருதி என்ற பெயர்கொண்டவர்கள் கூட இந்தக் கிராமத்தில் இல்லை. அந்தப் பெயர்களைத் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வைக்கவும் இந்த ஊர் மக்கள் விரும்புவதில்லை. ஊர் பெரியவர்களின் கூற்றுப்படி, அந்த ஊரின் காவல் தெய்வமாக உள்ள நிம்பா தைத்யாவை பற்றிய ஒரு புராண கதையே, இந்த வழக்கத்தை அவர்கள் கடைபிடிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் ஹனுமானுக்கும், நிம்பா தைத்யாவுக்கும் ஏற்பட்ட மோதல் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, அதற்கு முடிவுகட்டப் பகவான் ஸ்ரீராமரே நேரடியாக வந்ததாக நம்பப்படுகிறது. அப்போது இந்தக் கிராமத்திற்கு ஒரே காவல் தெய்வமாக நிம்பா தைத்யாவே இருக்க வேண்டும் என ஸ்ரீராமர் அருள்வாக்கு கூறியதால், அதனை ஏற்று ஹனுமான் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.
அதன் பிறகு, இந்தக் கிராமத்திற்குள் ஹனுமானின் தோற்றம் எந்த வடிவில் இருந்தாலும், அது தீய பலனை தரும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் வேரூன்றத் தொடங்கியது. இந்த நம்பிக்கை கோயில், சிலை, பெயர் போன்றவற்றை தாண்டி நாளடைவில், மனிதர்களின் வாழ்க்கை தேர்வுகளையும் தற்போது தீர்மானிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக மாருதி என்ற பெயர் ஹனுமானின் பெயர்களுள் ஒன்றாகக் கருதப்படுவதால், அந்தப் பெயர்கொண்ட மாருதி பிராண்ட் கார்களை வாங்குவதோ, அந்த கார்களை கிராமத்திற்குள் நுழையவிடுவதோ தங்களுக்கு நல்லதல்ல என இந்தக் கிராம மக்கள் கருதுகின்றனர். இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும் ஒரு பழங்கதையையும் இந்த ஊர்மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாகப் பல ஆண்டுகளுக்கு முன் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மாருதி 800 ரக காரை வாங்கியதால், அவரது மருத்துவ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், காரணம் புரியாமல் தவித்த அவர் அந்தக் காரை விற்றுவிட்டு வேறொரு காரை வாங்கியதால், மீண்டும் அவரது தொழில் முன்னேற்றம் அடைந்ததாகவும் சொல்கின்றனர்.
வெளியூர் மக்களுக்கு இது வெறும் மூட நம்பிக்கையாகத் தோன்றினாலும், நந்தூர் நிம்பா தைத்யா கிராம மக்களின் பார்வையில், இது அவர்களின் வாழ்வை பல நூற்றாண்டுகளாகக் காத்து வரும் புனித மரபாகப் பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி இந்த வழக்கத்தை கடைபிடித்து வரும் கிராம மக்களால், இந்தக் கிராமமும் இந்தியாவின் வரைபடத்தில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
















