இந்தியாவுடனான இஸ்ரேலின் ஒத்துழைப்பும் நட்பும் முன்னெப்போதும் இல்லாத முறையில் அதிகரித்து வருகிறது. அதன் வளர்ச்சியாக, இப்போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா மற்றும் பிரதமர் மோடியுடனான இஸ்ரேலின் உறவு மிகவும் வலிமையானது என்றும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தாகவும் இருநாடுகளும் தங்கள் வர்த்தக மற்றும் ராஜீய உறவுகளைப் பலப்படுத்துகின்றன என்றும் பதிவிட்டுள்ளார்.
2014ம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புடைய பாதுகாப்புத் தளவாடங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2016ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லின் பிரதமர் மோடியை சந்தித்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது பற்றியும், இந்தியாவில் இஸ்ரேல் முதலீடு செய்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
2017ம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய கடற்படை, இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய ஒருங்கிணைந்த நீருக்கடியில் துறைமுக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பை (IUHDSS) அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பைதான் மற்றும் டெர்பி ஏவுகணை அமைப்பின் (SPYDER) முதல் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. மேலும், இஸ்ரேல் உருவாக்கிய விரிவான, ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பை (CIBMS) இந்திய இராணுவம் பயன்படுத்தி வருகிறது.
சென்சார்கள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் மூலம் எல்லை வேலியைக் கண்காணித்து, அத்துமீறல் குறித்து மக்களை எச்சரிக்கும் அதிநவீன அமைப்பாகும். இந்திய- பாகிஸ்தான் மற்றும் இந்திய- வங்கதேசம் எல்லைகளில் 6,300 கி.மீ முழுவதும் இந்த இஸ்ரேலின் ஸ்மார்ட் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூலை 4ம் தேதி பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்றதன் மூலம் அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
முன்னதாக இந்தியாவின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்த காலத்தில் 2003-ல் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். ஒரு இஸ்ரேல் பிரதமரின் முதல் இந்திய பயணம் அது என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து 2018ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவுக்கு வந்து இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
காசா போரில் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை ஆதரித்த இந்தியா உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சனங்களையும் மீறி இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது. இஸ்ரேலுக்குச் சென்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் மோடியின் ஆதரவை இஸ்ரேல் பிரதமருக்கு நேரில் தெரிவித்தார். கடந்த மே மாதம் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரில் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் நடுநிலையாக இருக்க முயற்சி செய்த நிலையில் இஸ்ரேல் வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது.
கடந்த ஆண்டு ஒருமுறையும் இந்த ஆண்டு ஒருமுறையும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் தொழிலதிபர்களுடன் இந்தியாவுக்கு வந்த இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் (Nir Barkat) நிர் பர்கத், இந்தியாவுக்கான இஸ்ரேல் முதலீடுகளைக் கொண்டு வந்தார். மேக் இன் இந்தியா மற்றும் தன்னம்பிக்கை பாரதம் ஆகிய கொள்கைகளை அறிவிப்பதற்கு முன்பே இந்தியாவுடனான இஸ்ரேலின் வர்த்தக உறவை உலகமே வியப்புடன் பார்த்தது. கடந்த 11 ஆண்டுகளில் இந்த உறவு என்னும் வலிமை பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பரில், இந்தியாவுக்கு வந்த இஸ்ரேல் நிதியமைச்சர் (Bezalel Smotrich’) பெசலெல் ஸ்மோட்ரிச்சின் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டு-பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. மேலும், வெளியுறவு அமைச்சர் Gideon Sa’ar’s கிதியோன் சாரின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கு வழிவகுத்தது.
சமீபத்தில் இஸ்ரேல் சென்ற மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உள்கட்டமைப்பு, சுரங்கம் ஆகிய துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்,இந்திய தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள்,இஸ்ரேல் நாட்டின் நீண்டகால உணவுப் பாதுகாப்புத் திட்டம், விதை மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளார் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மீதான நம்பிக்கையை இஸ்ரேல் மீண்டும் உறுதி படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தவும், இஸ்ரேல் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இஸ்ரேலின் நவீனம் மற்றும் இந்தியாவின் உற்பத்தித் திறன் இயல்பாகவே ஒரு புதிய கூட்டணியை உருவாக்குகின்றன என்று கூறப்படுகிறது. விரைவில் இந்தியாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரும்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















