மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 22 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோவில் பகுதியில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
மழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக 22 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆறுகள்,வடிகால் வாய்க்கால்களில் அதிகளவு நீர் செல்வதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு மேல் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கினால் பயிர் அழுகும் ஆபத்து ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைத்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இடுபொருள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















