டிட்வா புயல் பாதிப்பு இலங்கை மக்களையும், இலங்கை அரசையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டிற்கு ஆப்ரேசன் சாகர் பந்து என்ற பெயரில் முதற்கட்டமாக 27 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. தேவையான உதவிகளை அடுத்தடுத்து செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டுள்ளது. சுமார் 150 பேர் மாயமாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அனைத்து பாதிப்புகளுக்குமான முதல்புள்ளி நவம்பர் 17ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் இலங்கையின் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் எதிரொலியாக பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டிட்வா புயலும் உருவானது. இதனால், ஒட்டுமொத்த இலங்கையும் தற்போது உருக்குலைந்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டு வருவதாலும், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கேகாலை என்ற பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயமானதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பரித்தோடும் வெள்ளத்தில் யானைகள் அடித்து செல்லப்படும் காட்சிகள், இலங்கையில் எத்தகைய வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளன.
பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும், ஹெலிகாப்டர்களை களமிறக்கி மீட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கனமழையால் அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலையை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கிருந்த கைதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் அந்த அனைத்து கைதிகளும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
புயல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக இந்திய அரசு ஆப்ரேஷன் சாகர் பந்து என்ற பெயரில் நிவாரணப்பொருட்களை அடுத்தடுத்து அனுப்பி வருகிறது.
கூடாரங்கள், போர்வைகள், மருத்துவ பொருட்கள், உணவு உள்ளிட்ட 12 டன் பொருட்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் இலங்கையில் உள்ள நிலையில், அதில் உள்ள ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இலங்கை புயல் பாதிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பில் இருந்து இலங்கை விரைந்து மீண்டு வர பிரார்த்திப்பதாகவும், மேற்கொண்டு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதனை செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை நிவாரணப் பொருட்களை எடுத்துசென்று ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
















