கோவையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை 42 சவரன் தங்க நகைகளும், ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதனையடுத்து, குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய மூன்று பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர், மூவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவர்களது காலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து நீதிபதி தலைமையிலான விசாரணை நடைபெற உள்ளதாகவும், திங்கட்கிழமை உடற்கூறாய்வு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
















