வேதாரண்யம் பகுதியில் கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன.
டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 28 சென்டி மீட்டரும், கோடியக்கரையில் 36 சென்டி மீட்டரும், தலைஞாயிறு பகுதியில் 21 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், கரியாப்பட்டினம், வாய்மேடு, அண்டர்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















