ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், நண்பகலில் மேலும் பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதால் சென்னையில் லேசான மழை பெய்து வரும் நிலையில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோரும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். சென்னையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மெரினா மற்றும் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது.
















