கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகின் முதன்முதலில் தோன்றிய ஸ்தலமாகவும், உலக புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் விழா நடைபெறுவதற்கு முக்கிய கோயிலாகவும் ஆதி கும்பேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 27ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கின.
எட்டு கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.
தொடர்ந்து கோயில் விமான கோபுர கலசம் உட்பட பரிவார தெய்வ கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி செழியன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு சிலர் மயக்கமடைந்தால் பதற்றம் நிலவியது. மயக்கமடைந்த முதியவர் மற்றும் பெண் ஆகியோரை கோயில் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கும்பாபிஷேக விழாவில் ஏன் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எதிர்பாராமல் நடந்த சம்பவம் என அலட்சியமாக அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து சென்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மகா சபை நிர்வாகி நிரஞ்சன், கோயில் கும்பாபிஷேக விழாவிற்காகப் பாஸ் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், நிறைய பேர் விஐபி பாஸ் பெற்று உள்ளே சென்றதாகவும் குற்றம்சாட்டினார்.
மூத்த குடிமக்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், எந்த ஒரு கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும், அந்த இடத்தில் தீயணைப்புத்துறை, மருத்துவ முகாம், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவைகளை அரசு அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
















