இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் எனத் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், பயன்படாத பாறை குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதனிடையே, பாறை குழிகளில் குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்செய்தியாளர்களிடம் பேசிய மேயர் தினேஷ்குமார், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், முதல்கட்டமாக அபராதமின்றி குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
அடுத்த மாதம் முதல் தரம்பிரித்து வழங்காத குப்பைகளைப் பெறக்கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும், இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க முடியாது என்றும், நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இடுவாய் மக்களுக்கு அங்குள்ள உண்மையை அம்பலப்படுத்துவேன் எனவும் மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
















