இந்தியா சார்ந்த 3 முன்னணி பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 8.2 சதவீத வளர்ச்சியை பெற்று, 7.5 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளன. இதன் காரணமாக அம்மூன்று நிறுவனங்களும் உலக ஆயுத உற்பத்தி தரவரிசையில் தங்களுக்கான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
இந்தியா தனது பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஆயுத உற்பத்தியை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இதில் Hindustan Aeronautics Limited (HAL), Bharat Electronics Limited (BEL) போன்ற முக்கிய நிறுவனங்கள் முன்னணி பங்கு வகிக்கின்றன. போர் விமானங்கள், ரேடார் மற்றும் எலக்ட்ரானிக் போர்துறை அமைப்புகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் கப்பல்கள் உள்ளிட்ட பலவற்றை இந்நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ போன்ற திட்டங்கள் இந்த துறைக்கு ஊக்கமளித்து வருவதால், சொந்த தொழில்நுட்ப மேம்பாடு, ஏற்றுமதி வாய்ப்பு, உலகளாவிய ஆயுத சந்தையில் இந்தியாவின் நிலை ஆகியவை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதற்கிடையே, Stockholm International Peace Research Institute-ன் (SIPRI) 2024-ம் ஆண்டுக்கான முதல் 100 ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று முன்னணி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
நிறுவனங்களின் சராசரி வளர்ச்சி, ஏற்றுமதி நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த உலக தரவரிசைவகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hindustan Aeronautics Limited, Bharat Electronics Limited, Mazagon Dock Ship Builders Limited (MDSL) ஆகிய அந்த மூன்று ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் கடந்த ஆண்டில், தங்களின் வருவாயில் நிலையான உயர்வை பெற்றுள்ளதாக Stockholm International Peace Research Institute வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அந்த மூன்று நிறுவனங்களின் மொத்த வருவாயும் 8.2 சதவீதம் உயர்ந்து, 7.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகஅந்தத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனம் என்ற இடத்தை தக்க வைத்திருக்கும், Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் ஆயுத வருவாய் 3.8 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் குறைந்துள்ளதால் உலக தரவரிசையில் 42-வது இடத்தில் இருந்து 44-வது இடத்திற்கு இறங்கி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக உருவாக்கும் 4 பில்லியன் டாலர் வருவாயில் 95 சதவீதம் பாதுகாப்பு துணை உற்பத்திகளில் இருந்தே வந்ததாக Stockholm International Peace Research Institute-ன் தரவுகள் குறிப்பிடுகின்றன.
அதே நேரத்தில், Bharat Electronics Limited நிறுவனம் கடந்த ஆண்டுக்கான இந்திய நிறுவனங்களில் மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய அரசின் ரேடார் மற்றும் எலக்ட்ரானிக் போர்த்துறை அமைப்புகளுக்கான அதிகப்படியான ஆர்டர்கள் காரணமாக, Bharat Electronics Limited நிறுவனத்தின் ஆயுத வருவாய் 23.6 சதவீதம் அதிகரித்து 3.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக தரவரிசையில் இந்த நிறுவனம் 68-வது இடத்தில் இருந்து 10 இடங்கள் உயர்ந்து 58-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மற்றொருபுறம் கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவைகளை உருவாக்கும் Mazagon Dock Ship Builders Limited நிறுவனம், 1.12 பில்லியன் டாலர் பாதுகாப்பு வருவாயுடன் 9.38 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக SIPRI தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 1.37 பில்லியன் டாலராக உள்ள நிலையில், அதில் 89.8 சதவீதம் பாதுகாப்பு உற்பத்தியில் இருந்து கிடைத்துள்ளதாக SIPRI தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நிறுவனம் ஏற்கனவே உள்ள 91-வது இடத்தை தக்க வைத்துள்ளது.
இதுமட்டுமின்றி 2024-ம் ஆண்டு உலகளவில் உள்ள முதல் 100 பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனங்களின் ஆயுத வருவாய் 5.9 சதவீதம் உயர்ந்து, 679 பில்லியன் டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்த உயர்வின் பெரும்பகுதிக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களே காரணம் என SIPRI தரவுகள் குறிப்பிடுகின்றன. தரவுகளின்படி அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனம் 62 பில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், முதல் ஆறில் ஐந்து இடங்களை அமெரிக்க நிறுவனங்களே பிடித்துள்ளன.
இங்கிலாந்தின் BAE Systems நிறுவனம் 4-ம் இடத்திலும், ரஷ்யாவின் Rostec நிறுவனம் 7-வது இடத்திலும், சீனாவின் AVIC நிறுவனம் 8-வது இடத்திலும் உள்ளதாக SIPRI தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, SIPRI வெளியிட்ட இந்திய பாதுகாப்புத் துறையின் செலவு மதிப்பீட்டின்படி, 2024-ம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு செலவு 86.23 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதே ஆண்டில் பாகிஸ்தானின் பாதுகாப்பு செலவு 10.165 பில்லியன் டாலராகவும், சீனாவின் பாதுகாப்பு செலவு 313.67 பில்லியன் டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
















