இந்தியா நடத்திய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள சுக்கூர் மற்றும் நூர் கான் விமான தளங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அழிக்கப்பட்ட ஹேங்கரை அகற்றியும், புதிய கட்டடங்களைக் கட்டியும் அந்நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இருநாடுகளுக்கு இடையேயான மோதலின் தீவிரத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. இது தொடர்பான ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய பாதுகாப்பு படைகள் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை முன்னெடுத்தன. மே 8-ம் தேதி பாகிஸ்தான், இந்திய எல்லைகளில் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி இந்திய ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
குறிப்பாகச் சில CM-400 குரூஸ் ஏவுகணைகளும் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை நோக்கி ஏவப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மே 8-ம் தேதி இரவு மற்றும் 9 ஆம் தேதிகளில், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு மையங்களை குறிவைத்து இந்தியா ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. மே 9-ம் தேதியும் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பல தூரநிலை தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், அவற்றால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்பவில்லை. மாறாக இந்தச் சம்பவத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய விமான படைகள் பாகிஸ்தானில் உள்ள பல விமான தளங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தி சேதத்தை விளைவித்தன.
ரஃபேல் விமானம் மூலம் SCALP ஏவுகணைகள், சுகோய்-30 மற்றும் MiG-29 விமானங்கள் மூலம் RAMPAGE மற்றும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை ஏவி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகக் கடந்த மே 10-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில், சுக்கூர், நூர் கான் உள்ளிட்ட பல விமான தளங்கள் பலத்த சேதமடைந்தன. அதற்குப் பின் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் 88 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்தது. அப்போது வெளியான சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் பாகிஸ்தான் விமான தளங்களில் ஏற்பட்ட சேதங்களை வெளிச்சம்போட்டு காட்டின.
இந்நிலையில், சுக்கூர் மற்றும் நூர்கான் விமான தளங்களின் சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக, சுக்கூர் விமான தளத்தில் மே 10-ம் தேதி நடந்த தாக்குதலின்போது அழிக்கப்பட்ட, ஒரு UAV ஹேங்கர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதையும், பலத்த சேதமடைந்த சில சுற்றுப்புற கட்டடங்கள் சமன்படுத்தப்பட்டுள்ளதையும், செயற்கைக்கோள் படங்கள் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளன. சமன்படுத்தப்பட்ட பகுதிகளில் புதிதாகஎந்தக் கட்டடங்களும் நிர்மானிக்கப்படாமல், அதன்அருகில் உள்ள 2-வது ஹேங்கர் பாதிப்பு இல்லாமல் இருப்பதையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேபோல, நூர் கான் விமான தளத்திலும் சேதமடைந்த பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு , அப்பகுதியில் இரு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது முன்பிருந்த கட்டடத்தின் அளவிலேயே அமைந்திருந்தாலும், அதன் வடிவமைப்பில் மாற்றம் உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
ஏற்கனவே, பாகிஸ்தான் முப்படைகளின் தலைமை தளபதி ஆசிம் முனீர், நூர் கான் விமான தளத்தில் இந்தியா நடத்திய தாக்குதலை ஒப்புக்கொண்டிருந்த நிலையில், இந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் அங்கு ஏற்பட்ட சேதங்களை அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியிருந்த அபாயகரமான பொருட்களை அகற்ற மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகள் நீண்டிருக்கும் என்பதால், இந்த சீரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் மாதமே தொடங்கியிருக்க வாய்ப்புள்ளதாக ஜியோ இன்டலிஜென்ஸ் ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் கருத்து தெரிவித்துள்ளார்.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானில் உள்ள முக்கிய ராணுவ கட்டமைப்புகளை நேரடியாகக் குறிவைத்ததன் மூலம், இந்தியா தனது பாதுகாப்பு அடிப்படைகளை எவ்வளவு வலுவாகக் காத்துக்கொள்ளத் தயாராக உள்ளது என்பதை துல்லியமாக வெளிப்படுத்தியது. இந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தற்காலிகமாக அதிகரித்தாலும், பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் போர்நிறுத்த நடவடிக்கைகள், தாக்குதலின் ஆபத்தான பரிமாணங்களை தடுக்க முக்கிய பங்கு வகித்தன. புதிதாக வெளியாகியிருக்கும் இந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள், அந்நேரத்தில் நிகழ்ந்த தாக்குதல்களின் உண்மையான தாக்கத்தையும், சேதங்களையும் மீண்டும் நினைவூட்டியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
















