கோவை ரயில் நிலையத்தில் இருந்து 64 பேர் கொண்ட குழுவினர் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டு சென்றனர்.
தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆன்மீக நகரமான காசிக்கும் இடையேயான நாகரீக மற்றும் கலாச்சார தொடர்பை போற்றும் வகையில், தொடர்ந்து 4-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மத்திய அரசு சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களுக்காக சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆன்மீகவாதிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட 64 பேர்கொண்ட குழுவினர் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டனர். முன்னதாக இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
















