திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கண்ணம்பாளையம் ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள கண்ணபாளையம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனையடுத்து ஏரி முற்றிலும் நிரம்பிய நிலையில், மதகுகள் ஏதும் இல்லாததால் உபரி நீரானது பாணவேடு தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஏரியில் உபரி நீரை வெளியேற்ற மதகுகள் அமைக்க வேண்டும் எனவும் குடியிருப்புகளை சூழ்ந்த நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















