ரஷ்யா எப்போதுமே இந்தியாவின் பக்கமே உறுதியாக நிற்கிறது. இருநாடுகளும் நீண்டகாலமாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றன. உக்ரைன் போருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் வந்திருக்கும் நேரத்தில், கோவாவை இந்தியாவுடன் இணைப்பதில் ரஷ்யா துணை நின்ற வரலாற்றைச் சொல்லும் ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவுக்கு முதன் முதலாக வந்த அந்நியர்கள் போர்ச்சுகீசியர்களே. அதே போல் இந்தியாவை விட்டுக் கடைசியாக வெளியே சென்றவர்களும் போர்ச்சுகீசியர்கள் தான். 1498-ல் போர்த்துகீசிய வீரன் வாஸ்கோடகாமா தலைமையில் கடல் வழியாகப் போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு வந்தனர். மீண்டும் இரண்டாவது முறை 1501-ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.
1505ம் ஆண்டு இந்தியாவுக்கான முதல் போர்ச்சுகீசிய கவர்னராகப் பிரான்ஸிஸ்கோ டி அல்மீடியா பதவியேற்றவுடன், இந்திய பெருங்கடலை தாங்களே நிர்வகிப்போம் என்றும், தங்களின் அனுமதியின்றி கடல் பகுதியை யாரும் கடந்து செல்லக்கூட கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதற்காகவே போர்ச்சுகீசியர்கள் நீல நீர் கொள்கையைக் கொண்டுவந்தார்கள்.
1509-ல் இரண்டாவது கவர்னராகப் பதவியேற்ற அல்ஃபோன்சோ டி அல்புக்வர்கியு, பிஜாபூர் சுல்தானிடமிருந்து 1510-ல் 4,193 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவாவைக் கைப்பற்றி, இந்தியாவில் போர்ச்சுகீசிய கொடியை நிலை நிறுத்தினார். அதன்பின் கோவாவே போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக விளங்கியது. தொடர்ந்து, பதினாறாம் நூற்றாண்டுக்குள்ளாக டாமன், டியு, சால்செட் போன்ற இந்திய கடல் எல்லைப் பகுதிகளையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர்.
ஆங்கிலேயர்களுடன் போர்ச்சுகீசியர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய மக்கள் போராடி வந்தனர். 1947-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த போதும் போர்ச்சுகல், கோவா, டாமன் மற்றும் டையூவை ஒப்படைக்க மறுத்துவிட்டது. 1953-ல் போர்ச்சுகலுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்த இந்தியாவுக்கு எதிராக, கோவா போர்ச்சுகலின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி, இந்தப் பிரச்சினையை நேட்டோ மற்றும் ஐ.நா.வுக்கு போர்ச்சுகல் எடுத்துச் சென்றது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் போர்ச்சுகலை ஆதரித்தன.
அப்போது, சோவியத் யூனியன் இந்தியாவின் உரிமைக்கு ஆதரவாக நின்றது. 1961ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் நேரு இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 18ஆம் தேதி ஆப்ரேஷன் விஜய் தொடங்கப்பட்டது. 36 மணி நேரத்துக்குள் டிசம்பர் 19ம் தேதி , போர்த்துகீசிய கவர்னர் ஜெனரல் மானுவல் அன்டோனியோ வஸ்ஸலோ இ சில்வா இந்திய இராணுவத்திடம் சரணடைந்தார்.
கோவா, டாமன் மற்றும் டையூ ஆகியவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. கோவா இந்தியாவுடன் ஒரு யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட்டது. பின்னர் 1987-ல் கோவா தனி மாநிலமானது. ஆப்ரேஷன் விஜய் போரின் போது போரின் போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சோவியத் யூனியன் தலைவர் லியோனிட் பிரெஷ்நேவ் , இந்தியாவின் இராணுவ நடவடிக்கையும் இந்திய வீரர்களின் திறமையும் பாராட்டியிருந்தார்.
மேற்கத்திய கோபம் வரும்போது அதைப் புறக்கணிக்குமாறு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டதுடன் கோவாவும், இந்தியாவும் அதன் புவியியல் வரலாறு, கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகள் எனப் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியிருந்தார். சோவியத் யூனியனின் தலைவர் நிகிதா குருசேவ், நட்பு நாடான இந்தியாவுக்கு ஒவ்வொரு சோவியத் குடிமகனும் ஒருமித்த பாராட்டு சொன்னதாக முன்னாள் பிரதமர் நேருவுக்கு தந்தி அனுப்பியிருந்தார்.
இந்தியா கோவாவிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், 1961ம் ஆண்டு “டிசம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலைமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஐநா சபையில் போர்த்துகீசிய அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான அங்கோலா குடிமக்களை போர்ச்சுகல் அழித்தொழிக்கும்போது, கண்டிக்காத அமெரிக்காவும், பிரிட்டனும் ஐ.நா சபையின் சாசனத்தை போர்ச்சுகல் மீறுவதாகவும் கூறவில்லை என்றும் போர்ச்சுகல் செய்தது ஒரு ஆக்கிரமிப்புச் செயல் என்றும் கூறவில்லை என்று ஐ.நா.வுக்கான சோவியத் ஒன்றியத்தின் நிரந்தர பிரதிநிதி வலேரியன் சோரின் தெரிவித்திருந்தார்.
சோவியத் ஒன்றியம் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவா மீதான இந்தியாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது. மேலும், அமெரிக்கா நிறைவேற்றிய இந்திய எதிர்ப்புத் தீர்மானங்களையும் சோவியத் ஒன்றியம் தொடர்ந்து வீட்டோவைப் பயன்படுத்தி ரத்து செய்தது. இப்போது உக்ரைன் மக்களின் சுதந்திரத்துக்காகப் பேசும் அமெரிக்கா, கோவாவின் விடுதலையைக் கடுமையாகக் கண்டித்தது என்பதும் ரஷ்யாவே இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது என்பதும் வரலாறு.
பனிப்போர் காலத்தில், தற்போது செயலிழந்த அணிசேரா அணிக்கு இந்தியா தலைமை தாங்கியது என்றாலும், ரஷ்யாவையும் புதினையும் ஆதரிப்பதன் மூலம் வரலாற்றின் சரியான பக்கத்தில் இந்தியாவை நிறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி.
















