திருச்சி உறையூரில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது. பரம்பரை, பரம்பரையாகப் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்குக் கடனுதவி வழங்க உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி மாநகர் உறையூரில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகள் சுத்தமான பருத்தி நூலில் மட்டுமே தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நுணுக்கமான வடிவமைப்புடன் வெப்பம் மற்றும் குளிரையும் தாங்கக் கூடியதாக மட்டுமல்லாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாகவும் இந்தப் பருத்தி சேலைகள் விளங்கிவருகின்றன.
தனித்துவமிக்க இந்தப் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது அச்சேலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022ம் ஆண்டு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், தரவுகள், புள்ளிவிவரங்கள், சேலைகளின் மாதிரிகள் என மத்திய அரசு கோரிய அனைத்துவிதமான விவரங்களும் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
உறையூர் பருத்தி சேலையின் விற்பனை கடந்த காலங்களில் குறைந்து வந்ததன் விளைவால், பலர் இத்தொழிலை விட்டே வெளியேறிவிட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்தப் புவிசார் குறியீடு மீண்டும் அவர்கள் சேலை உற்பத்தி செய்யும் தொழிலுக்குள் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும் மறுபுறம் கைத்தறி பருத்தி நூலால் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை விற்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பருத்தி சேலையை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில், தங்களின் தொழிலைப் பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் கடன் வழங்கி உதவ வேண்டும் எனவும் பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















