தேனி மாவட்டம் போடியில் திமுக நிர்வாகி சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், போடியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், போடி நகராட்சி 29-ஆவது வார்டு உறுப்பினருமான சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
போடி புதூர் இரட்டை வாய்க்கால் அருகே அமைந்துள்ள அந்த நிறுவனத்திற்கு, நேற்று மாலை 27 கார்களில் 32 அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர்களும் வந்திருந்தனர்.
நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக் குழுவில் டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் உள்ளிட்ட கொச்சி, பெங்களூரு, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
சோதனை நேரத்தில் சங்கர் அங்கு இல்லை. அவரைத் தேடி சில அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றபோதும், வீடு பூட்டப்பட்டிருந்ததால், அண்டை வீட்டாரிடம் விசாரணை நடத்தினர். சங்கரின் மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகர்மன்றத் தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
















