மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை வந்துள்ளார். மேலமடை பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேலு நாச்சியார் என பெயரிடப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, உத்தங்குடி பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களை அழைத்து வருவதற்காக அரசு மற்றும் தனியார் என ஆயிரக்கணக்கான வாகனங்களை திமுக நிர்வாகிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பயன்படுத்தப்படுவதால் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
















