வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாகப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்த சிறப்பு விவாதத்தை மக்களவையில் தொடங்கி வைத்துப் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை எனத் தெரிவித்தார். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கியிருந்தது என்றும், வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திர போராட்டத்தினால் நாம் இன்று சுதந்திரமாக அமர்ந்து இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வந்தே மாதரம் நம்மை ஊக்குவிகும் என்றும், தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக வந்தே மாதரம் திகழ்ந்தது எனவும் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி மிகப்பெரிய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எனப் புகழாரம் சூட்டினார்.
தமிழ் மொழியில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை கலங்கடிக்க வைத்தவர் சுப்பிரமணிய பாரதி எனக்கூறிய பிரதமர் மோடி, பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாடலை பாடி உணர்ச்சிவசத்துடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பியதாகக் கூறினார்.
வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக மிகப்பெரிய துரோகம் செய்யப்பட்டது எனக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தாகக் கூறினார்.
முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாக விமர்சித்த பிரதமர் மோடி, நாட்டை இரண்டாகப் பிளக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தமாகச் சரணடைந்து விட்டது எனக் குற்றம்சாட்டினார்.
















