மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிவந்த திமுக அரசு, தற்போது பிரதமர் மோடியின் பேச்சிலும் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டுமே தவிர, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தியா முழுவதும் மத்திய அரசின் துறைகளின் மூலமாக நேரடியாக 260 திட்டங்களும், மத்திய அரசின் உதவியின் மூலம் 54 திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் தமிழகத்திற்கு மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித்தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட அரசுத்திட்டங்களுக்காக மட்டும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு தேவையான திட்டங்களையும், நிதியையும் தங்கு தடையின்றி மத்திய அரசு ஒருபுறம் வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதுப்புது ஸ்டிக்கர்களை ஒட்டுவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழத் தொடங்கின.
பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டம், சக்தி நிவாஸ் திட்டத்திற்கு தோழி விடுதி, பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்திற்கு, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கு கலைஞர் கைவினைத் திட்டம் என மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த திமுக அரசும் அதன் முதலமைச்சரும், தற்போது பிரதமர் மோடி பேச்சிற்கும் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கியுள்ளது.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், CHIP முதல் SHIP வரை முன்னேறும் தமிழ்நாடு எனப் பேசியிருந்தார். இதனை எங்கேயோ கேட்டது போல இருப்பதாகச் சந்தேகித்த சமூகவலைத்தள வாசிகள் தங்களுடைய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியபோது கடந்த சில தினங்களுக்கு முன்பாக From chip-making to ship-making — India is building it all எனப் பிரதமர் மோடி பேசியிருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு என எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தமிழக அரசு என ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தமிழக அரசும் அதன் முதலமைச்சரும், தற்போது பிரதமரின் பேச்சையே தனது பேச்சாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் பெயரையும், முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசை விட மாநில அரசு தான் படியளப்பதாகக் கூறி, படையப்பா படத்தில் வரும் ”மாப்பிள்ளை அவர் தான், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கோவில் படத்தில் வரும் நாச்சியப்படன் கடையில் கோப்பை ஒன்றில் தன் பெயரை அச்சடிக்கும் நகைச்சுவையை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் திட்டங்களுக்குத் திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்ற நினைப்பது இனியும் நடக்காது எனப் பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தக்க பதிலடி கொடுத்திருந்தார்.
மக்களுக்காக மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை பின் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் புதுப்புது திட்டங்களை கொண்டு வரும் நிலையில், தமிழக அரசோ மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாது பிரதமர் மோடியின் பேச்சிற்கே ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சியில் இறங்கியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, மக்களுக்கான திட்டங்களை புதியதாக உருவாக்க வேண்டுமே தவிர, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற குரலும் தமிழகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
















