தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனால் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடியும் என அவரது அண்ணன் மகன் கே.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையனின் செயல்பாட்டால் 2019ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு திமுகவில் இணைந்ததாகவும், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிமுகவில் உள்ள இரண்டரை கோடி தொண்டர்களுக்குச் செங்கோட்டையன் துரோகம் செய்துள்ளதாகக் கூறினார். மேலும், இரட்டை இலையின் வாக்கு, தொண்டர்களின் விசுவாசம், சொந்த பந்தங்களின் பலம் ஆகிய மூன்றை வைத்து செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
















