வேளாண்துறை பிரச்சனைகளை தீர்க்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மேடைக்கு மேடை “நானும் டெல்டாகாரன் தான்” என உரிமை கொண்டாடுகிறீர்களே! ஒருபுறம், கொடுத்த வாக்குறுதியைக் கிடப்பில் போட்டு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேளாண் மேம்பாட்டுக் குழுக்களை அமைக்காததோடு, மறுபுறம் விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை இரட்டிப்பாக்கியது தான் தங்களின் நான்கரை ஆண்டு திமுக அரசின் சாதனை என தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான மின் இணைப்பைச் சரிவர வழங்காதது தொடங்கி, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறுதானியங்களை விற்காதது வரை திமுக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த இன்னல்கள் எண்ணிலடங்காதவை என்றும் அவர் கூறியுள்ளார்.
வியர்வை சிந்தி விளைவித்த பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தராமல் ஏமாற்றியதோடு, உரிய விலை கிடைக்காமல் தெருவில் கொட்டி போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டு தவிக்கவிட்ட அறிவாலய அரசைத் தூக்கியெறிய விவசாயப் பெருமக்கள் தயாராகிவிட்டனர் என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.
















