தனி நீதிபதியின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் ராம ரவிக்குமார் கொடுத்த மனுவை இணை ஆணையருக்கு கோயில் செயல் அலுவலர் ஏன் அனுப்பவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்டு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.
அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல, கிரானைட் கல் தான் என்றும் கோயில் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
தொடர்ந்து நீதிபதிகள் மலை உச்சியில் உள்ள தூணை கட்டுமானம் செய்தது யார் என கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என்றும் கோயில் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாதென கூறி விசாரணை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















