விருதுநகரில் மகளிர் உரிமைத் தொகை நிகழ்ச்சியில் அமைச்சர்களை முற்றுகையிட்டு பெண்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த 67 ஆயிரத்து 551 பேரில் 29 ஆயிரத்து 288 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், விண்ணப்பம் எதற்காக நிராகரிக்கப்பட்டது என அமைச்சர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அத்துடன் மாலை 7 மணியை கடந்தும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லை எனக் கூறி பெண்கள் வெளியே செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்காமல் அவர்களை அரங்கில் உள்ளே வைத்து கதவுகளை அடைந்தனர். மேலும், காலையிலேயே அழைத்து வரப்பட்ட தங்களுக்கு முறையாக உணவு வழங்கவில்லை எனவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.
















