இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை நீக்க, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த வரி, சட்டவிரோதமானது என்றும் இருநாட்டு உறவுக்குத் தீங்கு விளைவிப்பது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பரஸ்பர வரி என்ற பெயரில் இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அதிபர் ட்ரம்ப், கூடவே ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு வார்த்தை கிடையாது என்றும் அறிவித்தார்.
மிக அதிகமாக இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த நடவடிக்கை நியாயமற்றது என்றும், இதனால் அமெரிக்கர்களே அதிகப் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் பொருளாதார அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான Deborah Ross, Marc Veasey, மற்றும் Raja Krishnamoorthi ஆகியோர் இந்தியா மீதான வரியை ரத்து செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
ஏற்கெனவே, பிரேசில் மீதான வரிவிதிப்புக்கு எதிராக, அவசரகால அதிகாரங்களை வரி விதிப்புக்கு அதிபர் ட்ரம்ப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இருகட்சி செனட் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ், கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியை முழுவதுமாக ரத்து செய்வதை இந்தத் தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வர்த்தகம் முதலீடு, நல்லுறவு ஆகியவற்றால் இந்தியாவுடனான வட கரோலினாவின் பொருளாதாரம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று வட கரோலினா நாடாளுமன்ற உறுப்பினர் Marc Veasey தெரிவித்துள்ளார்.
வட கரோலினாவில் சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி உள்ளன என்றும் வட கரோலினாவில் இருந்து லட்சக் கணக்கான பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுவதாகவும் விவரித்த Marc Veasey, இந்தியா மீதான வரி சாதாரண வட டெக்சாஸ் மக்கள் மீது விதிக்கப்படும் வரி என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்காவின் நலன்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக விநியோகச் சங்கிலிகளைச் சீர் குலைப்பதோடு, பணியாளர்களுக்குச் சிரமத்தையும் நுகர்வோருக்குச் செலவையும் ட்ரம்பின் வரி விதிப்பு ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியா மீதான வரியை ரத்து செய்வதால், இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டுறவை வலிமைப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்பின் தன்னிச்சையான வரிவிதிப்புக்கு சவால் விடுத்துள்ள இந்தத் தீர்மானம், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை மீட்டெடுக்கும் ஒரு முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
















