பாகிஸ்தானின் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பாணினி பிறந்த சலாதுரா கிராமம் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ளது. உருது, பஞ்சாபி மற்றும் சிந்தி மொழிகளின் வேர் சொற்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதாகக் கூறி, சமஸ்கிருத பாடத்திட்டத்தை லாகூரில் உள்ள பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியின் சமூகவியல் இணை பேராசிரியரான ஷாஹித் ரஷீத் வடிவமைத்தார்.
வார இறுதி நாட்களில் மூன்று மாத காலம் பயிற்சி வகுப்பாகத் தொடங்கப்பட்ட சமஸ்கிருத கல்வி மாணவர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றதால், லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முழு நேர பாடமாகச் சமஸ்கிருத கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெறும் மொழியை மட்டும் கற்பதோடு மட்டுமின்றி, மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை இலக்கியங்களாகவும், தத்துவங்களாகவும் பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்தே கீதை மற்றும் மகாபாரத ஆய்வாளர்களை உருவாக்கப் பல்கலைக்கழகம் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஒரு நல்லுறவு பாலமாக அமையும் எனப் பேராசிரியர்கள் நம்புகின்றனர்.
















