தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாராட்டிப் பேசிய சம்பவம், அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் நடைபெற்ற கூட்டறவு சங்க மாநில மாநாட்டில் அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், அமித்ஷா கூட்டுறவுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், இதற்கென்று மத்தியில் தனி அமைச்சரவையை உருவாக்கியவர் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை மாநாட்டில் பங்கேற்றபோது, தமிழகத்தின் செயல்பாடுகள்குறித்துப் பேச வாய்ப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் பெரிய கருப்பன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
கொள்கை மாறுபாடு காரணமாகத் திமுக, பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், அமைச்சர் பெரிய கருப்பன் அமித்ஷாவை பாராட்டியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
















