நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகளால் மக்கள், பணத்தை இழந்து வருவது தொடர்பான தகவல்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆப்ரேஷன் சக்ரா – வி என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், அனைத்து வழக்குகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
111 போலி நிறுவனங்கள் மோசடிக்கு மையப்புள்ளியாக இருந்ததாகவும், இந்த நிறுவனங்கள் மூலம் நுாற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக 27 இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய 2 இந்தியர்கள் வங்கி கணக்குகள் வெளிநாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், ஆன்லைன் சைபர் கிரைம் மோசடியில் சர்வதேச நெட்வொர்க் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
















