திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள், குறைந்த மாணவர் சேர்க்கையின் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், போலி சமூகநீதி பேசும் திமுக அரசின் இரட்டை வேடத்தை நமக்குப் பட்டவர்த்தனமாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர் நலன் குறித்த நமது கோரிக்கைகள் எதற்கும் செவிசாய்க்காத திமுக அரசு, தனது அலட்சியத்தால் இன்று நூற்றுக்கணக்கான அரசு மாணவர் விடுதிகளை மூடியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு மாணவர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்குவது, குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராதது, மாணவர்களை சாதிரீதியாகத் திட்டுவது, வார இறுதி நாட்களில் வலுக்கட்டாயமாக மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது, முடிந்தவரையில் அரசு விடுதிகளை மூடுவது என ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனை அடகுவைத்து ஆணவமாக செயல்படும் திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















