பாஜகவின் தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன நிதின் நபின் நியமிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த நிதின் நபின்? அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .
எப்போதும் Surprise-களுக்குப் பெயர் போன கட்சி பாஜக. கட்சி மேலிடத்தின் அடுத்து மூவ் என்னவாக இருக்கும் என்பது, பாஜக நிர்வாகிகள் பலராலையே யூகிக்க முடியாது. உதாராணமாக, தமிழகத்தில் அதுவரை யாராலும் அறியப்படாமல் இருந்த அண்ணாமலையை, திடீரென மாநில தலைவராக்கி, அனைவரையும் கட்சி தலைமை ஆச்சரியப்பட வைத்தது. அண்ணாமலை யார், அவரது பின்னணி என்ன, அவர் ஏன் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதைப் பின்னர் அறிந்தபோதுதான், பாஜக மேலிடத்தின் தொலைநோக்கு பார்வைப் புரிந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைதலைவராக நியமிக்கப்பட்டதும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இப்படி, பாஜக மேலிடம் கொடுத்த Surprise-கள் ஏராளம். அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள பெயர்தான், நிதின் நபின். அவர்தான், தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் அவ்வளவாக அறியப்படாத நிதின் நபினுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ஒரு ஆச்சரியம் என்றால், அவருக்கு வெறும் 45 வயதுதான் ஆகிறது என்பது அடுத்த ஆச்சரியம். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களை வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் ஏதுவாக, பாஜகத் தலைமை இந்த நியமனத்தைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சரி, யார் இந்த நிதின் நபின்?
பீகார் மாநிலம் பட்னாவில் 1980ம் ஆண்டு பிறந்தவர் நிதின் நபின். இவரது தந்தையான நவின் கிஷோர் பிரசாத் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு, 2006ம் ஆண்டு நிதின் நபின் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
பங்கியூர் தொகுதியில் இதுவரை 5 முறைப் போட்டியிட்டுள்ள அவர், அனைத்து முறையும் வெற்றிவாகைச் சூடியுள்ளார். அதுவும் சாதாரண வாக்கு வித்தியாசத்தில் அல்ல. 5 முறையும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில்தான் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். அவர் தற்போது, பீகாரின் கட்டுமானத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
நிதின் நபினின் தலைமைப்பண்பாலும், களப்பணியாலும் கவரப்பட்ட பாஜகத் தலைமை, அவரை 2019ம் ஆண்டு சிக்கிம் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. அந்தப் பணியை அவர் சிறப்பாக செய்து முடித்ததால், 2024ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில தேர்தல் பொறுப்பாளர்ப் பொறுப்பையும் வழங்கியது. இதனிடையே, பீகார் மாநில பாஜக இளைஞரணி தலைவராகவும் பணியாற்றி, அதிகளவு இளைஞர்களை அவர் கட்சியில் இணைத்திருந்தார்.
இப்படி, தனக்கு வழங்கப்பட்ட அனைத்து வேலைகளைக் கனக்கச்சிதமாக செய்து முடித்தார் நிதின் நபின். எனவே, அவரது திறமையைத் தேசிய அளவில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பாஜகவின் செயல் தலைவர்ப் பொறுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
45 வயதான ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமையும். கட்சி தலைமை நம்மைக் கவனிக்கிறது, சற்று முயன்றால் நம்மாலும் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தும். இதன் மூலம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் உத்வேகத்தை ஏற்படுத்த பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகளைப் போல இல்லாமல், கட்சிக்காக யார் உழைத்தாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது பாஜக. பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் அக்கட்சி பெற்று வரும் அசுரத்தனமான வெற்றிக்கும் இதுவும் ஒரு காரணம்.
















