சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துரோகத்தை செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்றன.
பின்னர் மேடையில் பேசிய அன்புமணி, பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானதற்கு மிக முக்கிய காரணம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது மற்றும் மது விலக்கு அமல்படுத்தியதுதான் என்று கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் நிலை என்னவென்று தெரியும் என்றும், அதன் பிறகு சமூகநீதியை நிலைநாட்ட முடியும் எனவும் அன்புமணி கூறினார்.
இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை உருவாக்குதில் திமுக Phd முடித்துள்ளதாக விமர்சித்த அன்புமணி, முஸ்லிம்களை திமுக வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். அதிகாரம், சட்டம் என அனைத்தும் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஏதும் செய்யாத முதலமைச்சர் ஸ்டாலினை வரலாறு மன்னிக்காது என்றும் அன்புமணி கூறினார்.
















